Thursday, June 28, 2012

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு 


இன்னும், நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணத்தையும் மனிதர்களுக்காக விளக்கியுள்ளோம். எனினும் மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாகவே இருக்கின்றான்.(18:54)

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். "நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),

பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.      (Al Qur’an 16:68-69)
 







அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாத, மறக்கடிக்க முடியாத திரும்பத் திரும்ப நினைவுகூரப்படும் பல்வேறு தருணங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவற்றில் இறைவனின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான இறை அத்தாட்சிகளில், இன்று இஸ்லாமிய உலகம் நினைவு கூரவேண்டிய ஒரு நிகழ்வுதான் இஸ்ரா எனப்படும் மிஃராஜ் நிகழ்ச்சி.

உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் இறைவன் புறத்திலிரு
ந்து தமக்கு வழங்கப்பட்ட அத்தாட்சிகளை தத்தம் சமுதாயத்திற்கு காண்பித்து அவர்களை இறைநம்பிக்கையில் உறுதி படுத்தியது போன்று, அகிலத்தின் அருட்கொடையாகிய பெருமானார் நபி(ஸல்) அவர்களுக்கும் தனது அத்தாட்சியை காண்பிப்பதற்காக இறைவன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் துணையுடன் நபி(ஸல்) அவர்களை விண்ணுலகில் கொண்டு சென்று சுற்றிக் காண்பித்த நிகழ்வுதான் மிஃராஜ் எனப்படுகின்றது.


(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல்அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக்காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
(Al Qur'an 17:1)


(நபியே!) நிச்சயமாக உம்முடைய இவைன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்;ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.
 (Al Qur'an 17:60)



அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.

ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.

அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.

ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,

(அவருடைய) பார்வை விலகவுமில்லை; அதைக் கடந்து (மாறி) விடவுமில்லை.
திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்.
(Al Qur'an 53:13-18)




இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள்.

முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.

வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.

இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள்.

பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார்.

'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள்.

பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.

பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(தொடர்ந்து)
"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள்.


நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள்.

இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது'

- அபூ தர்(ரலி)


(புகாரி : 349)
 




அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. 



அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!'' என்று தமக்குள் கூறினர். அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன்.

என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கி விட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர்.

எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!.




மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்;

நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!'' என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்;

அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன். நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமே விட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது. ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.




மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியை விட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!'' என்று கூறினார்.

'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!'' என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!'' என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!'' என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்று விடாமல் ஓட்டிச் சென்றார்.

'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்! '



- அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)


புகாரி : 1057
 


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. 



1.(ஒருவர்) ஈசா (அலை) அவர்கள்:

ஹாரூனின் சகோதரியே (மர்யமே)! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை (என்று பழித்துக் கூறினார்கள்).

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள். (அல் குர்ஆன் 19:28-29)

நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.

இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம்தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.(அல் குர்ஆன் 19:30-31)

என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்; நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.

இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது.

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). (அல் குர்ஆன்
19:32-34)




2.(மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் 'ஜுரைஜ்' என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர்:

(ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) 'அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?' என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை).

அதனால் கோபமடைந்த அவரின் தாய், 'இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!" என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
பிறகு 'இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள்.

உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, 'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார்.

அக்குழந்தை, '(இன்ன) இடையன்" என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், 'தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்" என்று கூறிவிட்டார்.






3.(மூன்றாமவர்)

இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக்
கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான்.
உடனே, அவள், 'இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு" என் மகனை இவனைப் போல் ஆக்கு" என்று பிரார்த்தித்தாள்.

உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, 'இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே" என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது –

பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், 'இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே" என்று கூறினாள்.

உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, 'இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு" என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), 'ஏன் இப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்டதற்கு

அக்குழந்தை, 'வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) 'நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்துவிட்டாய்' என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை" என்று பதிலளித்தது.

(புகாரி 3435)
 






No comments: